News
யாழ்ப்பாண அரசின் அரச கட்டளை
Wednesday 24 May 2017
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
மாண்புமிகு முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் அவர்கட்கு,
உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து எனது தாய்நாட்டின் நிலைமையை நான் அவதானித்து வருகிறேன். நான் என் தாய்நாட்டின் மீதும் என் மக்களின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் தற்போதைய நிலைமை, தமிழ் மக்களின் கலாச்சாரப் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பது பற்றி நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன்.
பின்வரும் விடயங்கள் செயல்ப்படுத்தப்பட வேண்டும்:
யாழ்ப்பாண இராச்சியத்தின், தமிழ்க் கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றின் வளமான கலாச்சாரப் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவற்றை அழிக்க யாரும் அனுமதிக்கப்படக் கூடாது. எனது மூதாதையர்களின் ஆட்சிக் காலத்தில், யாழ்ப்பாணம் ஆரியச் சக்ரவர்த்திகளின் கீழ் ஓர் சுதந்திர இராச்சியமாக இருந்ததுடன், தமிழ் மக்கள் தங்கள் செல்வச் செழிப்பான பாரம்பரியத்தை பற்றிப் பெருமை கொண்டிருந்தனர். நம் கலாச்சாரப் பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவை பாதுகாக்கப்பட வேண்டும்.
பாரம்பரியங்கள் வரலாற்றின் ஒரு நினைவுச்சின்னமாக இருப்பதுடன் கடந்த காலத்துடனான எமது தொடர்பை அறிய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தததாகக் காணப்படுகின்றன. எனவே, நம் எதிர்காலத் தலைமுறையினருக்காக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள அனைத்து வரலாற்றுத் தளங்களும் நினைவுச்சின்னங்களும் மீட்டெடுக்கப்பட்டு அவற்றின் கடந்த காலப் பெருமைகளுடன் மீளமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் சந்தித்து வரும் இன மோதல்களுக்கு இன்றளவும் தீர்வு காணப்படவில்லை. மேலும் தமிழ் மக்களின் நீண்டகால சட்டபூர்வமான குறைபாடுகள் குறித்து உறுதியான தீர்வுகள் எடுக்கப்படவேண்டும். ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தமிழ் மககளுக்கான சரியான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து அரசியல்த் தலைவர்களும் தமக்கிடையேயான அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி அனைவரும் ஒன்றிணைந்து எந்த தாமதமும் இன்றி இன மோதலைத் தீர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளும் உரிமைகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பில் இடம்பெறவேண்டும். அப்படி உருவாக்கப்படும் அரசியல் யாப்பு இலங்கை மக்களின் ஒத்துழைப்புடனூடும் ஆதரவுடனூடும் அமுல் படுத்தப்பட வேண்டும்.
ஆரம்ப காலங்களிலேயே இன மோதல்கள் தீர்க்கப்பட்டிருந்தால், நாம் பல இன்னல்களைத் தடுத்திருக்கலாம். ஓர் அரசியல் தீர்வை செயல்ப் படுத்துவதன் மூலம் நீண்ட கால இனப்பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம். இச் சந்தர்ப்பத்தில் நான் அரசியல்த் தலைவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன் இதற்கான முழுப்பொறுப்பும் அவர்களைச் சார்ந்திருப்பதுடன், அவர்கள் மக்களின் தேவைகளைத் தீர்பதற்க்கு சேவையாற்ற வேண்டும்.
உள்நாட்டில் சுயநிர்ணய உரிமைகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். உண்மையில் சுயநிர்ணய உரிமை என்பது எந்த ஒரு வெளி அழுத்தங்களும் இல்லாமல் மக்கள் தம்மைத் தாமே ஆள்வதற்கான உரிமை. இந்த உரிமை அனைத்து மக்களுக்கும் உண்டு. இச் சுயநிர்ணய உரிமை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
அனைவரும் தன்னிச்சையாக வெவ்வேறு திசைகளில் செல்வதை விடுத்து நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புறந்தள்ளி நம் இலக்குகளை அடைய ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென நான் அனைத்து இலங்கைத் தமிழர்களையும் வலியுறித்திக் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டில் இன்னொரு போர் அல்லது மற்றொரு ஆயுதப் போராட்டம் தேவையில்லை. இப் போர்களால் நமக்கு கிடைத்த பயன் என்ன? ஆனால் இரண்டு பக்கங்களிலும் பல உயிர்களை இழந்துவிட்டோம். ஆகையால், இலங்கை மக்கள் இனி யுத்த பயம் இல்லாமல் வாழ வேண்டும். மீண்டும் ஓர் போர் நடைபெற அனுமதிக்கக்கூடாது.
சிலர் தங்கள் உரிமைகளையும், கெளரவத்தையும் போர் மற்றும் வன்முறை மூலம் அடைய முடியும் என நினைக்கலாம். நம் இலக்குகளை அடைவதற்கு யுத்தம் சரியான தீர்வு அல்ல. இரண்டு சமூகங்களுக்கிடையிலும் நம்பிக்கையினூடாக ஒரு பாலம் கட்டப்பட வேண்டும். பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் நம் இலக்குகளை அடைய முடியும். தமிழர் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வானது சமாதான வழிகளால் அடையப்பட முடியும்.
இலங்கைத் தீவில் சுமார் முப்பதாண்டு கால யுத்தம் எட்டு ஆண்ட்களுக்கு முன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இவ் யுத்தத்தில் மக்கள் தங்கள் வீடுகளைகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்ததுடன் அவர்களின் கனவுகளும் சிதைந்தன. கடந்த பல ஆண்டுகளாக மக்கள் இன்றும் தினசரி வாழ்வில் மிகப்பெரிய கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். என் பார்வையில் மீழ்கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்ததை விட தாமதமாகவே செயல்ப்படுத்தப்படுகின்றன.
எனவே அவர்களது வாழ்வாதாரங்களை மீளமைப்பதற்காக, அனைவரும் முன் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்பு மூலம் உதவ வேண்டும். ஒரு உண்மையான தேசிய நல்லிணக்க செயல்முறைத் திட்டம் தாமதமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்.
சென்ற வருடம் இலங்கை அரசு காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அலுவலகம் (OMP) ஒன்றை நிறுவியது. காணாமற் போனோரின் குடும்பங்கள் பதில் கோருகின்றன. எனவே காணாமற் போனவர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு முறையான பதில்களை வழங்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானம் நம்பிக்கைக்குறிய வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்கள் எந்த தாமதமுமின்றி அதன் உரிமையாளர்களிடம் திரும்பக் கையளிக்கப்பட வேண்டும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடையாளம் காணப்படாத குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இக் குழுக்களால் வாள்வெட்டு, கொள்ளை, சிறுமிகள் மற்றும் பெண்களுக்கெதிரான பல வனமுறைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நார்காடிக் போதைப் பொருட்கள் (Narcotic Drugs) நாட்டிற்குள் கடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்திய காலங்களில் வடக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற இளைஞர்களிடையே போதைப் பொருள் பாவணை அதிகரித்துக் காணப்படுகிறது. இப் போதைப் பொருள் பாவணை நம் இளைய சமுதாயத்தினரை அழித்து வருகிறது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை ஒரு கடுமையான குற்றமாகும். ஆகவே இவ் நார்காடிக் போதைப் பொருட்களை நாட்டிலிருந்து அகற்றவும் இவற்றைக் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவும் சட்ட அமுலாக்க அதிகாரிகளை நான் வலியுறுத்துகிறேன்.
உள்நாட்டு யுத்தம் 2009 இல் முடிவடைந்ததில் இருந்து, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை எண்ணி நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன். எனவே வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதியை வடக்கு மாகாண சபை பயன்படுத்த வேண்டும் எனவும், "யாழ்ப்பாணம்" அதன் முன்னாள் மகிமைக்கு மீளமைக்கப்பட வேண்டும் என நான் வேண்டுகோள் விடுகின்றேன்.
அனைத்து இலங்கை தமிழ் மக்களும் தமது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று எந்வித அச்சமும் இன்றி வாழ வேண்டும் என விரும்புகிறேன்.
இலங்கை மக்களின் வாழ்வில் சமாதானம் நிலவட்டும்!
Sgnd/. மகாராஜா ரெமிஜியஸ் கனகராஜா