News
சோம ஶ்ரீகர சோமாஸ்கந்த குருக்கள் (சுவிஸ்/இங்கிலாந்து) அவர்களுக்கு எழுதிய மடல்
Sunday 10 May 2020
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
திருவள்ளுவர் ஆண்டு 2051
சிவஶ்ரீ சோம ஶ்ரீகர சோமாஸ்கந்த குருக்களுக்கு எனது வணக்கங்கள்,
கடந்த நாட்களில் நாம் கேள்விப்பட்டறிந்த யாழ்ப்பாண நிகழ்வுகளில் ஒரு சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்து சென்ற ஒரு பாஸ்டர் போல் சற்குணராஜா அவர்களின் செய்திகள் உங்கள் அனைவருக்கும் புதிதானவைகள் அல்லவே.
இந்த பாஸ்டர் போல் சற்குணராஜா அவர்கள் ஒரு கிறிஸ்தவ பாஸ்டர் என்று அழைப்பது கிறிஸ்தவ மதத்திற்கே ஒரு இழிவானச் செயலாகும். நான் முற்றிலும் அறிந்தும், அறிவிக்கப்பட்ட விடயங்களில் இவர் ஒரு சுயமாக இயங்கும் எவ்வித தலமைத்துவம் இல்லாமலும் பணப் பலத்தால் இலங்கையில் உள்ள அனைத்து திருச்சபைகளை காட்டிலும் தன்னை பெரிதாக காண்பிக்க விரும்புகின்ற ஒரு நபராகும். இவரை கண்டிக்கவோ, இவருக்கு ஆலோசனை கூறவோ எவறாலும் முடியாததாகும். ஆகவே தமக்கென தாமாக தம் உறவினர்களை சேர்த்துக் கொண்டு இயங்கும் இவர் ஒருவர் பேச்சைக் கேட்காத தனியாக இயங்கும் நபராகும். மத போதகராக இயங்கும் இவரை கட்டுப்படுத்த எவ்வித நபர்களாலும் முடியாது என்பதே உண்மையாகும்.
என்னுடைய பல வருட அனுபவங்களில் எனக்கு மிகவும் பிடித்த, நெருங்கிய நண்பர்களாக அன்றும் இன்றும் பல கிறிஸ்தவ போதகர்களும், குருவானவர்களும் இருந்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த நபர் எவ்விதத்திலும் கிறிஸ்தவ போதகர் என மதிப்பிடத்தக்கவர் இல்லை. ஆகவே இவரை ஒரு பாஸ்டர் என்று கூறி அழைத்து, புனிதமான கிறிஸ்தவ மதத்தை சொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை.
யாழ்ப்பாணத்தில் போர் காலங்கள் தொட்டு தங்கள் சேவைகளை இன்றும் செய்து வருகின்ற பல மூத்த ஊழியர்கள் இவரது சம்பவத்தாலும், பண பலத்தாலும் செய்யப்படும் செயல்களைக் குறித்து என்னுடன் தனிப்பட்ட விதத்தில் முறையிட்டு தங்கள் கவலைகளை தெரிவித்தார்கள். யாழ்ப்பாணத்து மூத்த போதகர்களை அவர் எள்ளளவும் மதிக்காது, யாழ்ப்பாணத்தில் தன் சபைப்பெயரை பெரிதாக்குவதற்கும் மக்கள் தொகையையும், புகழிலையும் அதிகரிக்க அவர் அயராது பாடுபடுகின்றார்.
கடந்த நாட்களில் இவரது சம்பவத்தால் நான் பல மக்களின் கருத்துகளையும் எண்ணங்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. எனிலும் யாழ்ப்பாண அரச சரித்திரங்களில் போத்துகேயர் வரும் முன்பாக பல தமிழர் பெளத்த, முகமதிய மதத்திற்கும் போத்துகேயர் வரவிற்குப் பின்னர் பலர் கிறிஸ்தவ மதத்திற்கும் மாறும் வேலைகளில், எனது மூதாதையினரான யாழ்ப்பாண மன்னர்கள் எவ்வாறு இத்தகைய சூழ்நிலைகளை சந்தித்து தீர்த்தார்கள் என நான் நன்கு அறிவேன்.
தமிழர் பல மதங்களில் ஆதிகாலம் தொட்டு இருந்துள்ளார்கள். நீத்தார் வணக்கம், இயற்கை வழிபாடு, சமணம், ஜவனம், பெளத்தம், சைவம், வைணவம், கிராமத்திய வழிபாடுகள், முகமதியம், கிறிஸ்தவம், நாஸ்தீகம் என அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழர் பல நம்பிக்கையில் உள்ளார்கள். நல்வழியை போதிக்கும் நெறிகளை மதம் கொண்டுள்ளதால் அவரவர் தம்தம் மனதில் உறுதிகொண்டுள்ள மதத்தை பின்பற்றும் சுய உரிமை எவருக்கும் உண்டு. இதைத்தான் பின்பற்ற வேண்டும் என கண்டிப்பாக கட்டாயப்படுத்துவது சட்டரீதியாகவும், சுய உரிமையின் படியாகவும் எவ்விதத்திலும் முறையில்லை. எனிலும் ஏழை எளிய மக்களை மூளைச் சலவை செய்து, எங்கள் மதத்தில் வந்தால் வியாதி நீங்கும், பேய்கள் ஓடும், வசதி கிடைக்கும் என பொய் பிரச்சாரம் செய்து மதம் மாற்றும் நபர்களை நாங்கள் இனங்கண்டு நீக்கவேண்டியது அவசியமாகும். பல மக்கள் மூலைச் சலவை செய்யப்பட்டு அவர்கள் அவசர முடிவுகளினால் இன்று பரிதபிக்கும் நிலமையில் உள்ளார்கள். பரிசுத்த வேதாகமத்தில் இயேசு பிரான் தமக்கு சீஷரையே உருவாக்க கூறினாரே தவிர, தங்கள் பல வசதிகளுக்காக மதம் மாற்றுதல் செய்வது அல்லவே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகவே சைவ குருக்களான உங்களுக்கு எனது ஆலோசனைகள் என்னவெனில், கோவிலுக்கு வரும் மக்களுக்கு சைவ சமயத்தின் தர்மங்களை நன்கு விளக்கி போதியுங்கள். அவர்களுக்கு மத வெறியை அல்ல அவர்களுக்கு நல்ல வழிகளையும் சைவ நெறிகளையும் போதியுங்கள். மக்களை வீடு சென்று விசாரியுங்கள். மக்களை கோவில் நற்கிரிகைகளில் பங்கு பெறச்செய்து, அவர்களை சைவ சித்தாந்தங்களில் ஊக்குவியுங்கள். சைவ தர்மங்களையும் நல்ல பண்புகளையும் அவர்கள் கடைபிடிக்க வையுங்கள். இதனால் மக்களுக்கு தமது மதத்தில் பற்றும் தெளிவும் கிடைக்கும்.
அது போலவே கிறிஸ்தவ போதகர்களும் நாங்கள் தமிழர் என்னும் உணர்வுகளை விடாது, நமது தமிழ் கலாச்சாரம் பாரம்பரியங்கள் நிலைக்க செயல்படுங்கள். தமிழுக்கு புத்துணர்வு கொடுத்த கிறிஸ்தவர்களான வீரமாமுனிவர், இராபர்ட் தெ நோபிலி, சீகன்பால்க், ஜி. யு. போப், தனிநாயக அடிகளார், தாவீது அடிகள், எனது நெருங்கின உறவினராகிய ஞானபிரகாசம் சுவாமிகள் (வைத்திலிங்கம்), பேரருட்திரு ஜெரோம் எமிலியானிஸ்பிள்ளை என பிரகாசித்த பல நபர்களை நோக்கிப்பாருங்கள். அவர்களைப்போல நீங்களும் தமிழுக்கும் தமிழருக்கும் உங்கள் தொண்டைச் செய்யுங்கள்.
யாழ்ப்பாணத்தில் இதுவரை மதக்கலவரம் வரவில்லை. அதை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க பல அரசியல் அமைப்புக்கள் காத்துக்கொண்டு உள்ளனர். ஆகவே நம் மத்தியில் மதக்கலவரம் வராத வண்ணம் வடக்கு கிழக்கு மற்று அனைத்து இலங்கை மக்களையும் அன்போடும், அவதானத்தோடும், ஒருவருக்கொருவர் நட்பாக இருக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றேன். மதம் என்பதை விட முதலாவது மனிதாபிமானம் அனைவருக்குள்ளும் அவசியம். நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள். நமக்குள் எவ்வித பிரிவுணர்வுகளும் இல்லை.
யாழ்ப்பாண ராஜ்ஜியமானது ஒரு சைவ நெறி தர்மத்தை கொண்ட ராஜ்ஜியம். ஆனால் அதில் பிற மத நம்பிக்கை உள்ளவர்களும் உள்ளனர். ஆகவே மதங்களை கொண்டு இன ஒற்றுமையை இழக்காது, உங்கள் உங்கள் நம்பிக்கையை பிறர் நோகாத வண்ணம் கடைபிடியுங்கள்.
இவ் மடலில் கூறப்பட்டவை யாவும் எனது பணிவான வேண்டுகோளாகவும் எனது அரசக் கட்டளையாகவும் உள்ளது!
இங்கனம்,
Sgnd/. ராஜா ரெமிஜியஸ் கனகராஜா
(யாழ்ப்பாணத்து மகாராஜா)
இந்த மடலானது இவர்களுக்கும் அனுப்பப்பட்டது: அரச குருக்களான ஶ்ரீ கி. குருசுவாமி சர்மா குருக்கள் (நல்லூர்-ராஜதானி), சிவஶ்ரீ சோம ஶ்ரீகர சோமாஸ்கந்த குருக்கள் (சுவிஸ்/இங்கிலாந்து), யாழ்பாண பாஸ்டர் ஐக்கியம், அனைத்து இலங்கை பாஸ்டர் ஐக்கியம்.