News
Thai Pongal Message 2021
Thursday 14 January 2021
ஆரியச்சக்கரவர்த்தி வம்சம்ආර්ය චක්රවර්තී රාජවංශය
Arya Cakravartti Dynasty
திருவள்ளுவர் ஆண்டு 2052
என் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் யாவருக்கும் மேலும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்னும் பொன்மொழி பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதாவது புதுமனை புகுவிழா, வரன் பார்ப்பது, மணப் பொருத்தம் பார்ப்பது, திருமணம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் தை மாதம் பிறக்கட்டும் என்று குறிப்பிடுவதற்காகவே இந்த முதுமொழி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. பல காலங்கள் முன்பே நமது முன்னோர்கள் இரத்திணச்சுருக்கமாக கூறிய இக்கருத்து மிகவும் ஆழ்ந்த கருத்துள்ளதாகும்.
சென்ற வருடமும் நாம் செல்லுகின்ற தற்போதைய வருடமும் நாம் எவ்வகையான சூழ்நிலைகளை சந்தித்தோம், சந்திக்கவுள்ளோம் என்பதை அனைவரும் அறிந்துள்ளோம். இக்கால சூழ்நிலைகள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவதற்கும், முன்புபோல் சர்வசாதாரணமாக ஒன்று கூடி ஆலயஞ்சென்று பண்டிகையை அனுஷரிக்கவும் முடியாததாகும். எனது குடும்பத்திலும் கடந்த வாரம் காலஞ்சென்ற இளவரசன் தம்பையா கதிரவேல் தம்பிராஜா, பார்வதி தம்பிராஜா அவர்களின் மகள் இளவரசி ஜீவநாயகி சுப்ரமணியம் அவர்களின் இழப்பு எம்மை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது. எனிலும் நான் முன் குறிப்பிட்ட எமது மூத்தவர்களின் நம்பிக்கைக்கிணங்க, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதே நமது வருங்காலத்தைக் குறித்த நிச்சயமாகும்!
சங்க காலத்து பரிபாடல் ஒன்றில்,
“நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும்
கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல
விழுத் தகை பெறுக என வேண்டுவதும் என்மாரும்
பூ வீழ் அரியின் புலம்பப் போகாது
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும்
கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும்
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக என்மாரும்”
என்று தங்கள் வாழ்க்கை இன்பரகமாக அமையவேண்டி தை மாதத்தில் இறைவனை தொழுதுகொள்ளும் பழக்கத்தினை தமிழ் மக்கள் கொண்டுள்ளதாக இப்பாடல் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாகிலும் தமிழர், தமிழ் மொழி எத்தகைய சூழ்நிலையில் அழுத்தப்பட்டாலும், அதை அவர்கள் தங்கள் கல்வி, நற்பண்பு, ஞானம், இறை நம்பிக்கையினால் அனைத்தையும் வென்று, இன்று வரை தமிழரும் தமிழ் மொழியையும் வாழச்செய்தார்கள். நமது மூதோர்களின் அடிச்சுவடுகளை நாமும் கடைப்பிடித்து, நம் மக்களை கல்வியிலும், நற்பண்புகளிலும், ஞானத்திலும், இறை நம்பிக்கையிலும் வளரச்செய்து தமிழர் புகழை ஓங்கச்செய்வோம்!
உங்கள் அனைவருக்கும் இனிய தைப்புத்தாண்டு, தைப்பொங்கள் நல்வாழ்த்துக்கள்!
ஸ்ரீ கைலாசநாதர் துணை உங்களோடு இருப்பதாக!
இங்ஙனம்,
Sgnd/. ரெமிஜியஸ் கனகராஜா
(யாழ்ப்பாணத்து மகாராஜா)